09/02/2024
09-02-2020 ன் மீள் பதிவு: வெற்றிகரமாக இரண்டு பேட்ச் முடித்துவிட்டோம்.
#சமூககடன்
திரும்பி பார்ப்பதற்குள் 29 வருஷங்கள் ஓடிவிட்டது என்று சொல்வது அபத்தம்!
290 வருஷங்கள் ஆன மாதிரி சிறு அயர்ச்சி!
எத்தனை எத்தனை மனிதர்கள், நாடுகள், சூழ்நிலைகள், சவால்கள், தவறுகள், சிரமங்கள், பிரச்சினைகள், பெற்றவைகள், இழப்புகள், நட்புகள், துரோகங்கள், வலிகள், காயங்கள், பெருமைகள், கௌரவங்கள் . . .
இப்போது திரும்பி பார்த்தால் அனைத்தையும் மீறிய வியப்பில், அத்தனையும் அனுபவங்களாக மற்றும் அவை கற்றுதந்த பாடங்களாக மனதில் விரிகிறது.
1991ல் பாலிடெக்னிக் முடித்து, ராமநாதபுரத்தில் முதல் பணியாக பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டுமானத்தில் தனி சூப்பர்வைசராக ஆரம்பித்தது இந்த பயணம்.
முதல் 5 ஆண்டுகளில் சில பள்ளிவாசல்கள், மருத்துவமனை, LPG Bottling Plant, 2000MTPD சிமென்ட் பிளான்ட் என்று தடதடவென்று ஓட ஆரம்பித்தது.
96ல் முதலில் மலேசியா சென்று, அங்கிருந்து பின் சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா என்று ஏறக்குறைய அனைத்து தென் கிழக்காசிய நாடுகளிலும் பயணித்து பணியாற்றியதில் இன்னும் வேகமெடுத்தது.
2007ல் தாயகம் திரும்பி இங்கும் இந்தியாவின் பல பகுதிகளிலும், பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் சற்று நிதானித்து தொடர்ந்தது.
இடையில் கிண்டி பொறியியல் கல்லூரியில் பகுதிநேர மேற்படிப்புகள்.
2012ல் சொந்த நிறுவனம் ஆரம்பித்து, மீண்டும் தவழ்ந்து, நடந்து, ஓடி, தடுமாறி வீழ்ந்து, மீண்டும் எழுந்து ஓடி இலக்கை தூர தூரமாக ஆக்கி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
சிறிய வீடுகள், அரண்மனை போன்ற மாளிகைகள், அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தடுப்பணைகள், பழைய கட்டிடங்களை மறுசீரமைத்து வலிமைபடுத்துதல் என்று பரந்துபட்ட நிறைய துறைகளில் 141 புராஜக்ட்கள் முடித்தாயிற்று.
பொறியியல் பெருங்கடலில் ஒரு கையளவு கற்றிருக்கிறோம் என்றாலும் திருப்தியடையாத வேட்கையில், கற்றலும் அனுபவ தேடலும் இன்னும் தொடர்கிறது.
பகுதிநேரமாக பொறியியல் கல்லூரிகளில் கற்பித்தலும், அனுபவ பகிர்தலும் சிறிது மகிழ்வை தந்தாலும், சமீபத்திய வருடங்களில் சவாலான பணிகள், பொருள் ஈட்டல் தாண்டி ஏதோ ஒன்று மனதின் குறையாக, நெருடலாக உறுத்திக்கொண்டேயிருந்தது.
அதற்கு காரணம், பொறியியல் படித்து வேலையின்றி தவிக்கும் மாணவர்களை அன்றாட வாழ்வில் கடந்துகொண்டிருப்பதும், இளைஞர்களிடம் ஒரு விரக்தி தோன்றி அது பொதுவெறுப்பாகவும் மாறி யார் அல்லது எது காரணம் என்று புரியாமல் சமூகவிரோத சக்திகளிடம் சிக்கிவருவதும் என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிந்ததுதான்.
தனி மனிதனாக நாம் என்ன செய்யமுடியும் என்று கவலையும், ஆற்றாமையும், இயலாமையும் தோன்றினாலும், ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற சமூக பொறுப்பும், வேட்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.
சரி, முதலில் என்ன பிரச்சினை என்பதை கொஞ்சம் தள்ளியிருந்து பார்ப்போம் என்று தோன்றியது.
இளைஞர்கள் நிறையபேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பு இல்லையா?
கண்டிப்பாக இருக்கிறது.
பிறகு ஏன் வேலை கிடைக்கவில்லை?
நிறுவனங்கள் வேலை தெரிந்தவர்களை எதிர்பார்க்கிறார்கள். படித்தவர்களுக்கு வேலை செய்ய தெரியாது.
நிறுவனங்கள் பயிற்சி அளிக்கவேண்டும் என்பதுதான் சரி. ஆனால் இன்று நேரமோ, வசதிகளோ, பொருளாதார சூழ்நிலைகளோ சாதகமாக இல்லை.
ஒரு சிறிய கிராமத்திலிருந்து, ஆங்கிலம் பேச தெரியாமல் வெளியுலக அனுபவமும், வேலை அனுபவமும் இல்லாமல் நான் தொடங்கிய பயணமும், தேடித்தேடி வாய்ப்புகளை பெற்று பயன்படுத்தி கற்றது சுய முயற்சியாலும் தெய்வத்தின் அருளாலும் எனக்கு கிடைத்தது.
நான் பெற்றதை மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும் அல்லவா? அதுதானே நான் இந்த சமூகத்திற்கு கொடுக்கவேண்டிய கடன்?
ஆகவே அந்த பொறுப்பை ஏற்பதாக முடிவெடுத்து, கட்டுமானத்துறையில் பொறியியல் முடித்து அனுபவமும் வேலையும் கிடைக்காதவர்களுக்கு இலவச பயிற்சியும், தங்க இடமும், உணவும் கொடுக்க முடிவெடுத்து களத்தில் இறங்கிவிட்டோம்.
தேவை உள்ளவர்களுக்கு உதவ நீங்களும் உதவுங்கள்.
எங்களை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.
Keshthana Academy
[email protected]