Om Sri Kamatchi Amman ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்மன்

  • Home
  • India
  • Mangadu
  • Om Sri Kamatchi Amman ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்மன்

Om Sri  Kamatchi Amman ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்ரீ காமாக்ஷி அம்மன்
சக்தி/ பயன்பாடு ஓம் சிவசக்தி
(1)

அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும், பக்த கோடிகளுக்கும்  வணக்கம். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கௌதம நதிக்கு கிழக்...
11/04/2026

அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும், பக்த கோடிகளுக்கும் வணக்கம். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கௌதம நதிக்கு கிழக்கு திசையில் அமைந்துள்ள அரும்பாக்கம் கிராமத்தில் 300 வருடங்களுக்கு மேலாக அரசாட்சி செய்து வரும் அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மனுக்கு புதியதாக எழுந்தருளியுள்ள திருக்கோவிலுக்கு வரும் வைகாசி மாதம் 14ஆம் தேதி 28/05/2026 அன்று மகா குடமுழக்கு நன்னீராட்டு விழா நடக்க இருப்பதால் அனைத்து பக்த கோடிகளும் ஆன்மீக அன்பர்களும் கலந்துகொண்டு தங்களால் இயன்ற உதவியை செய்து அம்மன் அருளை பெற இருகரம் கூப்பி வணங்குகின்றோம்
GPAY NO (UPI)
99945 19189
தொடர்புக்கு
+91 9283469999
+91 9677625241

🌙அனைத்து விதமான தோஷத்தை போக்கும் மாசி மகம்☀🔥அவன் அருளாலே அவன் தாள் பணிந்து🌺  பக்தியுடன்🙏 ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அ...
25/02/2026

🌙அனைத்து விதமான தோஷத்தை போக்கும் மாசி மகம்☀

🔥அவன் அருளாலே அவன் தாள் பணிந்து🌺 பக்தியுடன்🙏 ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ..... 🙏🙏🙏🙏🙏.......

🌏மாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளை மாசி மகமாக கொண்டாடுகிறோம். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்திற்கு ஒன்று அல்ல, பல தனிச்சிறப்பு உண்டு. சாஸ்திர முறைகளின் படி, சந்திர பகவான் சிம்ம ராசி மகம் நட்சத்திரத்திற்குள் சஞ்சரிக்கும் நாளையே மாசி மகம் என்கிறோம். அதுவே குரு பகவான், மகம் நட்சத்திரத்திற்குள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நுழைவார். அந்த நாளை தான் மகாமகம் என குறிப்பிடுகிறோம்

🌏மாசி மகம் நாளில் மேல் உலகத்தில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும், நம்முடைய பித்ருக்களும் பூமியில் உள்ள நதிகளில் நீராடி, தங்களின் பாவங்களை போக்கிக் கொள்வதற்காக பூமிக்கு வருவதாக ஐதீகம். இதனால் குறிப்பிட்ட இந்த நாளில் மட்டும் பூமி முழுவதுமே தெய்வீக ஆற்றல் பரவி இருக்கும். குறிப்பாக புனித நதிகளில் அதிக தெய்வீக ஆற்றல் நிறைந்திருக்கும். அந்த சமயத்தில் நாமும் சென்று நீராடினால் நம்முடைய பாவங்களும் நீங்கி, நன்மைகள் அதிகரிக்கும், தெய்வீக ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக தான் கடல், ஏரி, குளம், ஆறு, கிணறு என அணைத்திலும் புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதால் ஏதாவது ஒன்றிலாவது மாசி மகத்தன்று புனித நீராட

🔥பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசி மகக்தில் கடலாடு, நதிகலோடு, குளங்கலோடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்கலாம்.

🔥திருவண்ணாமலை... யுகம் யுகமாக நிலைத்துநிற்கும் திருத்தலம். ஈசன் அங்கு நெருப்பு மலையாக ஹரியும் பிரம்மனும் அடிமுடி அறிமுடியாத அற்புதனாக எழுந்து நின்ற அண்ணாமலையார், ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் திருநாளன்று வல்லாள மகாராஜாவுக்கு தர்ப்பணம் செய்வதற்கும், தனது தந்தையாக ஏற்றுக் கொண்டவருக்காக பித்ரு காரியம் செய்வார் என்பது ஐதீகம். இந்த வைபவம், திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் அன்று கௌதம நதி என்னும் தூஞ்சலாற்றில் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் அண்ணாமலையாரே தன்னுடைய தந்தையாக ஏற்றுக் கொண்ட வல்லாள மகாராஜாவுக்கு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியே ஒரு கோபுரம் இருக்கிறது. வல்லாள மகாராஜா கோபுர வாசல் மாசி மகம் அன்று மட்டும்தான் திறக்கப்படும்.

🌏மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது.

🌏மாசிமக தீர்த்தமாடல் பற்றிய புராணக்கதை

🌙ஒருசமயம் வருண பகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அதனால் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். வருணன் கட்டுண்டு கிடந்ததால் உலகத்தில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. வருண பகவான் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும். இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.

🌙திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.

🔥சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பௌர்ணமியில்தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.

🌏கடலுக்கு அடியில் இருந்த பூமியை ஸ்ரீமன் நாராயணன் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன.

🌙பார்வதி தேவி, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

🍀துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

🌏ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் அன்றுதான்.

🌏மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி.
இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

🌏மாசிமகம் பித்ரு தோஷம் மற்றும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

🔥திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கும் மன்னர் முதல் மக்கள் அனைவருக்கும் கம்பத்தில் காட்சி தந்த கம்பத்திளையனார்🌏திருவாரூர்...
26/01/2026

🔥திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கும் மன்னர் முதல் மக்கள் அனைவருக்கும் கம்பத்தில் காட்சி தந்த கம்பத்திளையனார்

🌏திருவாரூர் மற்றும் காஞ்சியில் பிறந்தால் முக்தி. தில்லையை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்திதான்''
நந்திபகவான், மார்க்கண்டேய முனிவருக்குச் சொன்ன சிவ ரகசியம் இது.
அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர அல்லது தங்க மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மற்றும் காந்த மலையாகவும் திகழ்கிறது.
சிவனே மலையாக வீற்றிருக்கும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உள்ளன அவை கவுரி நகர், தேகநகர், அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இன்னும் பல பெயர்கள் உள்ளன அப்படிப்பட்ட புனித திரு அண்ணாமலையில் 14-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன் பிரபுடதேவன். இவரும் அருணகிரிநாதரும் சிறந்த நண்பர்கள். அருணகிரிநாதர் சிறந்த முருக பக்தர், முருகப்பெருமானை நேரில் கண்டவர்

⭐மன்னரின் அவையில் சம்பந்தாண்டான் என்ற அம்பாள் உபாசகர் ஒருவர் இருந்தார். இவரும் இறையருள் பெற்றவர்தான். இருந்தாலும் மிகுந்த தலைக்கனம் கொண்டவர். மன்னருக்கும், அருணகிரிநாதருக்கும் இருக்கும் நட்பை சம்பந்தாண்டான் விரும்பவில்லை. அதனால் அருணகிரிநாதரை அவமானப்படுத்த எண்ணினான். அதனால் சம்பந்தாண்டான் அருணகிரிநாதரை ஒரு போட்டிக்கு அழைத்தான். என்னுடைய சக்தியால் ஆதிபராசக்தியை நேரில் எழுந்தருளச் செய்கிறேன். அருணகிரிநாதரால் முடிந்தால் முருகனை எழுதருளச் செய்யட்டும்’ என்று அருணகிரிநாதரிடம் சம்பந்தாண்டான் ஆணவத்துடன் சவால் விட்டார்.

🔥திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் இருக்கின்ற சிவகங்கை தீர்த்தக்கரையில் மன்றம் கூடுகிறது. சம்பந்தாண்டான் தேவியை அழைக்கிறான். ‘பக்தியோடு வேண்டி அழைத்தால் ஓடோடி வரும் அன்னை ஆதிபராசக்தி.
ஆனால் ஆணவத்தோடு அழைத்தால் எப்படி வருவாள்?' சம்பந்தாண்டான் தனது முயற்சியில் தோல்வியடைகிறான். இப்போது அருணகிரிநாதரின் முறை வருகிறது. முருகப்பெருமானை நினைத்து பக்தியோடு துதிக்கத் தொடங்கினார் அருணகிரிநாதர்.

🔥கதாயுதத்தை விடாது தோள் மீது வைத்துள்ள வீமசேனனால் எதிர்க்கப்பட்டதும், ஆயுதங்களினால் நீண்ட வலிமை உள்ளதும் ஆகிய பகைவர்களின் பெரிய சேனையானது மாண்டு பொடிபடும்படியும், பயத்தினால் கதறும்படியான பசுக் கூட்டம் பயன் நீங்கி மீளும் பொருட்டும், அர்ச்சுனன் ஏறியுள்ள தேரின்கண் பாகனாய் இருந்து, பொன் மயமாய், வேத நாதத்துடன் கூடிய சங்கத்தை ஒலித்தவரும், அலைகள் மோதுகின்ற கடலின் நடுவே கிடக்கின்ற, உலகத்தை ஓர் அடியால் அளந்து மூடிய சிறந்த திருவடியை உடையவரும், கருட வாகனரும் ஆகிய திருமாலின் திருமருகரே!
ஒளி பொருந்திய மாலையை அணிந்த மார்புடன் கூடிய ப்ரபுட தேவ மகா மன்னனுடைய உள்ளமும் களிக்கும்படி எழுந்தருளி உள்ள, தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!
அதல உலகத்தில் வாழும் ஆதிசேடன் தனது பணாமகுடங்களை விரித்து ஆடவும், மண்ணுலகமும் மகா மேருமலையும் மிகவும் அசைந்து ஆடவும், சிவத்திற்கு அன்னியம் இல்லாதவளாகிய காளிதேவி ஆடவும், அக்காளிதேவியுடன் அந்நாளில் உலகமெல்லாம் அதிரும்படி கரசரணங்களை வீசி வாது புரிந்து திருநடனம் புரிந்த சிவமூர்த்தி இடப வாகனத்தின் மீது ஏறி ஆடவும், தேவரீரது பக்கத்தில் பூதவேதாளங்கள் யாவும் ஆடவும், இனிமை மிக்க வீணாகானம் புரியும் கலைமகள் ஆடவும், தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவன் ஆடவும், உமது திருவடியைச் சார்ந்துள்ள தேவலோக வாசிகளாகிய அமரர்கள் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரைக் கோயிலில் வாழும் உமது மாமியார் ஆகிய இலக்குமி தேவி ஆடவும், நீண்ட வடிவம் எடுத்த உமது மாமனார் ஆகிய நாராயணமூர்த்தி ஆடவும்,
என்று பாடிக்கொண்டிருக்கும் போது

அம்பாள் ஒரு சிறு விளையாட்டை நிகழ்த்த எண்ணினாள். அதனால் முருகனை தனது மடியில் அமர்த்தி, தம் கரத்தால் அணைத்துக் கொண்டாள். அருணகிரிநாதர் பாடலுக்கு எழுந்தோடி வர முடியாமல் அன்புக்கும், பக்திக்கும் நடுவிலே அல்லாடினார் முருகன். இந்தக் காட்சியை அருணகிரிநாதர் தனது மனக்கண்ணில் தெரிந்துக்கொள்கிறார். தன்னுடைய பாடலின் வரிகளைச் சற்று மாற்றிப்பாடுகிறார்.’

நீ ஏறிவரும் மயில் வாகனமும் ஆடவும், அதன்மீது தேவரீரும் ஆடி வந்து அருள வேண்டும்.
என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

🌹இதைக் கேட்டதும் அன்னைக்கு மனமும், கரமும் ஒருசேர நெகிழ்ந்தது. மெல்ல முருகனை செல்ல விடுத்தாள்.
அடுத்த நொடி வண்ணமயில் மீதேறி அமர்ந்த முருகன் ஒரு கணமும் தாமதிக்காமல், அங்கிருந்த முருகன் சன்னிதி மண்டபத் தூணில் காட்சி தந்தார். சூரியன் உதிப்பதை எப்படி மக்கள் அனைவராலும் காண முடியுமோ? அதேபோல அங்கே முருகன் உதித்ததை மன்னர் முதல் மக்கள் அனைவரும் கண்டு தரிசித்தனர். கம்பத்திலிருந்து வெளிப்பட்டதால் திருவண்ணாமலையில் அருளும் முருகப்பெருமானுக்கு ‘கம்பத்திளையனார்’ என்ற பெயர் வந்தது.

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே

🙏பக்தியுடன் மாங்காட்டு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்...🙏🙏🙏

🌏தென் தணிகை சுப்பிரமணியர் திருக்கோவில் குன்றத்தூர் 🙏🙏உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவ...
19/01/2026

🌏தென் தணிகை சுப்பிரமணியர் திருக்கோவில் குன்றத்தூர் 🙏

🙏உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
பக்தியுடன் மாங்காட்டு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்...🙏

🌏குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமே என்பது போல அந்த குன்றின் பெயராலே இருக்கும் ஊர் தான் குன்றத்தூர் சென்னைக்கு மிக அருகாமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
பதியெங்கிலும் இருந்து விளையாடிப் பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே' என்று அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று குன்றத்தூர் முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
முருகப்பெருமானின் தீவிர பக்தரான கிருபானந்த வாரியார், இறைவனைப் போற்றிப் பல சொற்பொழிவுகளை இங்கு வழங்கியுள்ளார்.
பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் அவதரித்ததும் இந்தத் தலத்தில்தான். இவர் தினமும் குன்றத்தூர் குமரனை வழிபடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அதை நினைவுகூரும் வகையில், மலையடிவாரத்தில் சேக்கிழாருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சேக்கிழார் குருபூஜையின்போது, முருகப் பெருமான் சேக்கிழார் சந்நிதிக்கு மலையிலிருந்து எழுந்தருளி, அவருக்குத் தரிசனம் கொடுப்பது தொன்றுதொட்டு மரபாக இருந்து வருகிறது.

#தல வரலாறு

🌹ஒருமுறை தாரகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். முருகப் பெருமான் படையுடன் வந்து திருப்போரூர் திருத்தலத்தில் அவனுடன் போரிட்டார். இறுதியாகப் போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். திருப்போரூரில் அசுரனுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், மனம் அமைதி பெறத் திருத்தணி நோக்கிப் புறப்பட்டார். திருத்தணி செல்லும் வழியில் குன்றத்தூர் மலையைக் கண்டு அங்கேயே சில நாட்கள் தங்கினார். அவர் மலையில் தங்கியிருந்தபோது ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். கந்தன் (முருகன்) சிவனை வழிபட்டதால் கந்தழீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சில நாட்களுக்குப் பிறகு முருகன் இங்கிருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியைக் குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்குக் கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் "கந்தழீஸ்வரர்' என்ற பெயரில் தனிக்கோயில் கொண்டு அருளுகிறார் எம்பெருமான் சிவன்.

#இத்தலத்தின் சிறப்பு

12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் 1726 ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்டது. இக்கோயில் சோழர்கள் ஆட்சிக் காலத்தின் மற்றொரு அற்புதமான பொக்கிஷம் ஆகும். நூறு தூண்கள் கொண்ட மண்டபம் கோயிலின் தனித்துவமான அம்சமாகும்.

முருகன் கோவில்
ஒரு சிறிய மலையின் உச்சியில் 84 படிகள் கொண்டு அமைந்துள்ளது. மேலும் மலை ஏறி நடக்க முடியாதவர்கள் கோயிலுக்கு செல்ல வாகன பாதை வசதி உள்ளது. மலையடிவாரத்தில் பதினாறு கால் மண்டபத்தைக் கடந்து படிகளில் செல்லும் போது, வழியில் "வலஞ்சுழி விநாயகர்" சந்நிதி முதலில் தரிசித்துவிட்டு சில படிகளில் ஏறி, உயரமான மண்டபத்தின் நுழைவாயிலில் மூன்று நிலை இராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் கொடி மரத்தை வணங்கிய பிறகு மூலவரை வழிபடச் செல்ல வேண்டும். இந்த திருத்தலத்தில் மூலவராகச் சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக பிரதான சந்நிதி உயரமான அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ளது. கருவறை சந்நிதி முன்பு வஜ்ரம் மற்றும் சூலாயுதத்துடன் துவாரபாலகர்கள் நிற்கிறார்கள். மூலவர் சந்நிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
முருகனது சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் விநாயகர், காசி விசுவநாதர், காசி விசாலாட்சி சந்நிதிகள் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்தில் பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை நவகிரகங்கள் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மற்றும், அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.
ஸ்தல தீர்த்தம் – சரவணப் பொய்கை
ஸ்தல விருட்சம் - வில்வம்

திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார்.
இக்கோயிலில் கருவறைக்கு வெளியே வாசலில் நின்று தரிசிக்கும்போது மூவரையும் ஒரு சேர தரிசனம் தர மாட்டார்கள்.

முருகப் பெருமான் சந்நிதியில் இருந்து பார்த்தால், முருகப் பெருமான் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண இயலாது. அதேபோல சந்நிதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகப் பெருமானுடன் வள்ளி அல்லது முருகப் பெருமானுடன் தெய்வானையை மட்டுமே தரிசிக்க முடியும். வள்ளி, தெய்வானை இருவரில் ஒருவரை மட்டுமே முருகப் பெருமானுடன் தரிசிக்க முடியும் என்ற வகையில் சந்நிதி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்து ஸ்ரீ சுப்ரமண்யரை வழிபட்டால் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

#விபூதி பிரசாதம் :

இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு நடத்தப்படும் அபிஷேக விபூதிதான், தினமும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாகத் தரபடுகின்றது.
குறைகளைத் தீர்க்கும் குன்றத்தூர் முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
ஓம் சரவணபவ
சரணம் சரணம் சண்முகா சரணம்

🌏குன்றத்தூரில் தோஷ நிவர்த்தி தரும் திருஊரகப் பெருமாள்! 🙏🌹குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்      படு துயர் ஆயின எல்லா...
17/01/2026

🌏குன்றத்தூரில் தோஷ நிவர்த்தி தரும் திருஊரகப் பெருமாள்! 🙏

🌹குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்
🙏பக்தியுடன் மாங்காட்டு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்...🙏

🌹சென்னைக்கு மிக அருகில்
இருக்கும் குன்றத்தூர் கோயில்களுக்கு புகழ் பெற்ற தலம். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயில், சோழர்கள் காலத்தில் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்ட மிகப் பழைமையான மகாவிஷ்ணு கோயில் ஒன்று அமைந்துள்ளது. இத்தல பெருமாள் திருஊரகப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி திருப்பதி ஏழுமலையானை போல காட்சி தருவது சிறப்பு. இக்கோயிலுக்குச் சென்று தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த உணர்வும் திருப்தியும் மனதில் ஏற்படுகிறது.

🌹ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த குலோத்துங்கச் சோழனுக்கு தோஷம் ஏற்பட்டது. பல திருத்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்தும் பலனளிக்கவில்லை. ஒரு நாள் மன்னனுடைய கனவில் தோன்றிய பெருமாள், தான் காஞ்சிபுரத்தில் திருஊரகப்பெருமாளாக அருளுவதாகவும், தன்னை அத்தலத்துக்குச் சென்று வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம் என்றும் திருவாய் மலர்ந்தருளினார். உடனே மன்னனும் காஞ்சி திருஊரகப் பெருமாள் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு ஆதிசேஷன் வடிவத்தில் எழுந்தருளியிருப்பதைக் கண்டான்.

🌹அதுவரை மன்னன் பெருமாளை அக்கோலத்தில் கண்டதில்லை. இதனால் தான் சரியான தலத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்று குழப்பம் அடைந்தான். அன்றிரவு மன்னன் அங்கேயே தங்கினான். அன்றும் மன்னன் கனவில் தோன்றிய பெருமாள் தானே இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியுள்ளதாக உணர்த்தினார். பின்னர் திருஊரகப்பெருமாளை தரிசித்த மன்னன் தனது தோஷம் நீங்கப் பெற்று தமது இருப்பிடத்துக்குத் திரும்பி வந்து, தனது தோஷ நிவர்த்தி நன்றிக்கடனாக இப்பகுதியில் ஒரு கோயிலை எழுப்பத் தொடங்கினான். மன்னனுக்கு திருப்பதி வேங்கடாஜலபதியாகப் பெருமாள் காட்சி கொடுத்ததால் அதே கோலத்திலேயே இத்தலப் பெருமாளுக்கு சிலை வடித்துப் பிரதிஷ்டை செய்து, தமது தோஷத்தைப் போக்கிய கோவிந்தனுக்கு திருஊரகப்பெருமாள் என்ற திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தான்.

🌹பொதுவாக பெரும்பாலும் அனைத்து கோவில்களும் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் அபூர்வமாக இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் மேற்கு திசை நோக்கி கம்பீரமாய் காட்சி தருகிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் பழைமையை பறைசாற்றும் விளக்குத் தூண் காட்சி தருகிறது. அதைத் தொடர்ந்து பலிபீடமும் கொடிமரமும் காட்சி தர, தொடர்ந்து சென்றால் ஒரு சிறிய சன்னிதியில் கருடாழ்வார் பெருமாளை நோக்கி நின்று காட்சி தருகிறார். முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு இத்தலம் திகழ்கிறது. அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலில் துவாரபாலகர்களாக ஜயன், விஜயன் அமைந்துள்ளனர். முன் மண்டபத்தில் ஒரு சிறிய பீடத்தில் ஆஞ்சனேயர், ராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோரின் திருமேனிகள் அமைந்துள்ளன.

🌹கருவறையில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் திருமலை திருப்பதி வேங்கடாஜலபதியைப் போல் காட்சி தருகிறார். இத்தல பெருமாள் காஞ்சியில் அமைந்துள்ள திருஊரகத்தைப் பார்க்கும் விதமாக மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளார். கிரக தோஷம் உள்ளவர்கள் அந்தந்த கிரகத்துக்கு உரிய நாட்களில் திருஊரகப் பெருமாளை தரிசித்தால் தோஷ நிவர்த்தி பெறுவர் என்பது ஐதீகம்.

🌹தாயார் திருவிருந்தவல்லி என்ற திருநாமத்தோடு, சதுர்புஜ நாயகியாக தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகில் தாயாரின் உத்ஸவ மூர்த்தி காட்சி தருகிறார். தாயார் சன்னிதிக்கு வெளிப்புறத்தில் தும்பிக்கையாழ்வான் சன்னிதி அமைந்துள்ளது. கோயிலில் சீதா தேவி, லட்சுமணருடன் கூடிய ஸ்ரீராமர் சன்னிதி அமைந்துள்ளது. அதன் எதிரில் ஒரு சிறிய சன்னிதியில் ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். அருகில் ஸ்ரீஆண்டாள் தனிச்சன்னிதியில் அருளுகின்றார்.

🌹வைகானச ஆகமம் கடைபிடிக்கப்படும் இத்தலத்தில் புரட்டாசி நாலாவது சனிக்கிழமையில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது விசேஷம். பங்குனி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் சுவாமி தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், நவராத்திரி, அனுமன் ஜயந்தி முதலான வைணவத் தலங்களுக்குரிய விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
(*இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன*)

#இருப்பிடம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்
23, முருகன் கோவில் சாலை, தேவி நகர், குன்றத்தூர், சிக்கராயபுரம், தமிழ்நாடு 600069.
#திறக்கும் நேரம்:
காலை: சுமார் 6:00 AM முதல் 12:30 PM வரை.
மாலை: சுமார் 5:00 PM முதல் 8:00 PM வரை (திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் 5 மணி முதல்).

🙏அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வில்வாரணி🌹முக்கண் கொண்ட பரமனுக்கு, வேதத்தில் முற்பட்டு நிற்கும் ப்ரணவ...
15/01/2026

🙏அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வில்வாரணி🌹

முக்கண் கொண்ட பரமனுக்கு, வேதத்தில் முற்பட்டு நிற்கும் ப்ரணவத்தைக் கற்பித்துப், ப்ரம்ம விஷ்ணுக்களாகிய இருவரும், முப்பத்து மூன்று வகைத் தேவரும் உனது திருவடியைப் போற்ற,
அவுணருடன் போர்செய்யவல்ல பெருமாளே!
🙏பக்தியுடன் மாங்காட்டு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்....🙏

🌏குன்று தோறும் குடிகொண்ட குமரன் உலகில் வேறெங்கும் இல்லாதபடி லிங்கவடிவில் அருள்பாலிக்கும் ஒரே திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம் - வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான். 27 நட்சத்திரங்களுக்கும் 12 இராசிகளுக்குமான ஒரே பரிகாரத்தலமாக விளங்கும் இத்தல முருகனை கிருத்திகை அன்று தரிசித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் செய்யாற்றங்கரையில் அமைந்துள்ள
நட்சத்திரகிரி என்று வழங்கப்படும் அழகிய சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இந்த சுயம்பு சுப்பிரமணியர் திருத்தலம்.
முருகப்பெருமானின் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய இத்திருத்தலம்

⭐முருகப்பெருமானின் பிரம்மகத்தி தோஷம்
நீங்கிய வரலாறு:

🌙முன்பு ஒரு சமயம் வேல் வித்தையில் வித்தகரான வேலவன் வேல் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்த கொண்டிருந்தபோது அவர் வீசிய வேல் பருவதமலை மேல் பாய்ந்தது. அப்போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளின் மேல் தவறுதலாக பட்டு அவர்களின் தலைகளைக் கொய்தது.

⭐அப்பொழுது பெருக்கெடுத்த உதிரம் அங்கு பாய்ந்து கொண்டிருந்த நதியில் கலந்து செந்நிற ஆறாக ஓடியது. எனவே அந்த ஆறு சிவப்பு நதி என்ற பொருளில் 'செய்யாறு' எனும் பெயர் பெற்றது. அறியாமல் நிகழ்ந்தாலும் தவத்தில் இருந்த ரிஷிகளின் சிரம் கொய்ததால்
முருகப்பெருமானை பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.
எனவே குமரக்கடவுள் அன்னை ஜகத்காரணி பார்வதிதேவியின் ஆலோசனைப்படி செய்யாற்றின் வடகரையில், வில்வாரணியில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம்,
மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரை பிரதிஷ்டை செய்தும், இடக்கரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு
வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோவில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் ஏழு இடங்களில் கைலாசநாதரை பிரதிஷ்டை செய்தும், ஒரு மண்டலம் பூஜித்துத் தன் பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றார்.

🌙பொதுவாக சிவாலயங்களில் தான் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பார். ஆனால் யாமறிந்த வரை உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் முருகப்பெருமான் சுயம்புவாக தோன்றி அருள் பொழியும் ஒரே திருத்தலம் இந்த வில்வாரணி சுப்பிரமணியர் திருக்கோயிலில் தான். எனவேதான் இத்தல இறைவன் சுயம்பு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் வேதகாலத்தில் வில்வ வனமாக இருந்ததால் இன்றும் இப்பகுதி வில்வாரணி என்று வழங்கப்படுகிறது. 27 நட்சத்திரங்களுக்குமான பரிகாரத்தலம் என்பதால் நட்சத்திர கிரி என்றும்
வழங்கப்படுகிறது

🌙முற்காலத்தில் இரண்டு சிவாச்சாரியார்கள் ஆடிக்கிருத்திகை அன்று முருகப்பெருமான் வழிபட்ட இந்த செய்யாற்றங் கரை 14 சிவாலயங்களையும் (பரி ) குதிரையில் பயணித்து ஒரேநாளில் தரிசனம் செய்து, இறுதியாக திருத்தணி சென்று
முருகப்பெருமானை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒருமுறை ஆடிக்கிருத்திகைக்கு இருவருக்கும் திருத்தணிக்கு செல்ல இயலாமல் தடங்கல் நேர்ந்தது. அதனால் இருவரும் மிகவும் மனம் வருந்தினர். வழியில் வில்வ வனத்தில் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது இருவரும் கண்ணயர்ந்து தூங்கிவிட்டனர். அப்போது இருவரது கனவிலும் ஒரே நேரத்தில் தோன்றிய முருகப்பெருமான், திருத்தணிக்கு செல்ல இயலவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் மேல் ஒரு கள்ளிப் புதருக்குள் சுயம்பு லிங்கமாக உள்ள என்னை சூரிய சந்திரரும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும், சிவ நாகமும் சதா சர்வ காலமும் பூஜிக்கின்றன. அங்கு வந்து என்னை தரிசித்து உங்கள் மனக்குறை நீக்கப் பெறலாம் என அருள்மொழி வழங்கினார்.

🔥சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் கந்தப் பெருமானை எங்கு சென்று கண்டுபிடிப்பது என மயங்கிய
சிவனடியார்களுக்கு குமரனே , நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் ஒரு நாகம் உங்களுக்காகக் காத்திருக்கும் அந்த நாகத்தைப் பின்தொடர்ந்தால் என்னை வந்து சேரலாம் என வழிகாட்டினார்.

⭐திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், தாங்கள் கண்ட கனவைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் ஒரே கனவு கண்டதை அறிந்து வியந்தனர். உடனடியாகப் புறப்பட்டு கார்த்திகேயனை தரிசிக்கச் சென்றனர். கனவில் கண்டது போலவே வில்வ வனத்தில் இருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி அங்கு ஒரு நாகத்தைக் கண்டனர். அதனைப் பின்தொடர்ந்து சென்று நட்சத்திரகிரியை அடைந்தனர். அங்கிருந்த, சப்பாத்திகள்ளி புதர் ஒன்றில் நாகம் சென்று மறைந்தது. புதரை விலக்கி பார்த்த சிவனடியார்களுக்கு ஆச்சரியம். அங்கு சுயம்பு லிங்கம் ஒன்று மிளிர்ந்து கொண்டிருந்தது.
கனவில் கண்டது போலவே சுப்ரமணியன் லிங்க வடிவாக காட்சியளித்தார். லிங்கத்தை ஐந்து தலை நாகம் ஒன்று பாதுகாத்து லிங்கத்திற்கு குடைபிடித்து நின்றது. சிவனடியார்கள் அந்த நாகத்தை கண்டு
பயந்ததால் அந்த நாகம் அதே நிலையில் கல்லாக மாறியது. கனவில் கண்ட அனைத்தும்
நிஜமாக நடந்ததைக் கண்டு வியந்து பக்திப் பரவசமடைந்த அந்த சிவனடியார்கள் அங்கு சண்முகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்து நித்திய பூசைகளை செய்து வழிபடத்துவங்கினர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாகம் சுப்பிரமணியருக்கு நிழல் தந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. இது இத்தலத்தின்
சிறப்பாகும்.

*1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்
முருகப்பெருமான் வழிபட்ட தலம்.
*முருகன் சுயம்பு மூர்த்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட திருத்தலம்.
*சர்வ தோஷ பரிகார தலம்.
சந்திர சூரியர்களும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை நித்தமும் வழிபடும் தலம்.
*வள்ளி தெய்வானை சமேதரராக
முருகப்பெருமான் நித்ய சிவபூஜை செய்யும்
திருத்தலம்.
*ராகு - கேது தோஷ நிவர்த்தி தலம்.
தல விருட்சம்: வில்வம்.
தல தீர்த்தம் : சந்திர புஷ்கரணி
சுயம்பு சுப்பிரமணியர் திருக்கோவில் அமைப்பு
போளூரிலிருந்து செங்கம் செல்லும்
வலதுபுறம் உள்ள சுயம்பு சுப்பிரமணியர் கோயிலின் பிரம்மாண்டமான வரவேற்பு நுழைவு வாயில் அமைந்துள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய அரசமரமும் பிள்ளையார் சன்னதியும் உள்ளது. மைதானத்தில் மத்தியில் சிவன் சன்னதியும் அமைந்துள்ளது. அடிவாரத்தில் ஒரு மண்டபம், தேர் நிலை, இடது பறத்தில் ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் அமைந்துள்ளன. அதனை அடுத்து சந்திர புஷ்கரணி தீர்த்த குளமும் அதன் கரையில் பிரம்மாண்டமான நந்தி சுதை சிற்பமும் அமைந்துள்ளது.
மலைப்பாதை துவக்கும் இடத்தில் சில வேல்கள் நடப்பட்டுள்ளன. மலையேறும் பக்தர்கள் அதனருகில் கற்பூரம் ஏற்றிவிட்டு மலை ஏறுகின்றனர். சுமார் 200 படிகள் ஏறி நட்சத்திரக்குன்றின் உச்சியை அடையலாம். சந்திர புஷ்கரணி தீர்த்தத்தின் இடதுபுறம் வாகனங்கள் மலை ஏற தனி வழி உள்ளது. படிகளில் ஏறிச்செல்லும் வழியில் முதலில் ஒரு கல்மண்டபமும் இடும்பன் சன்னதியும் உள்ளது. இந்த மண்டபத்தின் மேல் கூறையில் முன்புறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பின்புறம் முருகன் திருக்கல்யாணக் கோலமும் சுதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. சில படிகள் கடந்ததும் மற்றொரு இளைப்பாறும் மண்டபம் உள்ளது. அதில் பிரம்மாண்டமான ஆறுமுகக் கடவுளின் சுதை சிற்பம் வள்ளலார் அகத்திய முனிவர் போன்ற மகான்களின் சிறு சிறு சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில படிகள் கடந்ததும் வலது புறம் மலேசிய முருகன் போன்ற பெரிய சுதை சிற்பம் அமைந்துள்ளது. அருகில் பெரிய வேல் நடப்பட்டுள்ளது. படியேறி கோவிலை அடைந்ததும் சித்தி விநாயகர் சன்னதி நேர் எதிரே அமைந்துள்ளது. வலது புறம் பிரகாரத்திற்கு வெளியே விழா மண்டபம் அமைந்துள்ளது. சித்தி விநாயகர் சன்னதியை தாண்டி நான்கு நிலை இராஜ கோபுரம் அழகாக அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தின் உள்ளே நுழைந்தால் இராஜ கோபுரத்தின் எதிர் திசையை பார்த்தவாறு மூலவர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் லிங்க வடிவில் சுயம்புவாக நாக குடையுடன் அருள்புரிகிறார். லிங்கத்தின் பின்புறம் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் அருள்புரிகிறார். அருகில் தனி சன்னதியில் பால முருகன் தனி விமானத்தில் மயில் வாகனத்துடன்
அருள்பாலிக்கிறார். உள்மண்டபத்தில் கல்லால் ஆன வேல் உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடது புறம் சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில்
கணபதி, தட்சிணாமூர்த்தி, சுமித்ர சண்டர் எழுந்தருளியுள்ளனர். மேலும் பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன சிலதை மட்டுமே பதிவிட்டுள்ளேன் நன்றி சரணம் சரணம் சண்முகா சரணம்🙏🙏🙏

🌹பழையன கழிந்து, புதுமைகள் பெருகட்டும்!🔥தீமைகள் நீங்கி, நல்லவை தொடங்கட்டும்!🌺மணக்கும் சர்க்கரைப் பொங்கல் போல, உங்கள் வாழ்...
13/01/2026

🌹பழையன கழிந்து, புதுமைகள் பெருகட்டும்!
🔥தீமைகள் நீங்கி, நல்லவை தொடங்கட்டும்!
🌺மணக்கும் சர்க்கரைப் பொங்கல் போல, உங்கள் வாழ்வு இனிமையுடன் மலரட்டும்!
🌴கரும்பு போல நீண்டு, செழிப்பாக உங்கள் கனவுகள் நனவாகட்டும்!
☀சூரியன் வடதிசை நோக்கி, உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும்!
🌙அன்பின் காற்றால் அமைதி பெருக, அறுவடை மகிழ்ச்சி பொங்கட்டும்!
🌏தை பிறந்தால் வழி பிறக்கும்" - உங்கள் வாழ்வில் வளங்கள் பெருகட்டும்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இப்படிக்கு அன்புடன் மணிவண்ணன் 🙏

🌏திருக்குடந்தை திருத்தலத்தில் வில்லேந்திய கோலத்தில் சாரங்கபாணி’🙏இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக்...
06/01/2026

🌏திருக்குடந்தை திருத்தலத்தில் வில்லேந்திய கோலத்தில் சாரங்கபாணி’

🙏இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச் சொல்லும் பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பர். ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ எனச் சொன்னவர் திருமழிசை ஆழ்வார். புவி என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார். வீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி, எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து வாழவேண்டாம். வீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத முதற் பொருளான நாராயணன் தான்

🙏பக்தியுடன் ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ..... 🙏

#திருகுடந்தை

திருகுடந்தை என்ற பெயர் வந்ததற்கு காரணம் பிரம்மா உலகத்தை படைக்க எண்ணி, இமயமலையில் ஒரு குடத்தில் வித்துக்களை அடைத்து வைத்திருந்தாராம். அந்த குடமானது கங்கை நீருடன் மிதந்து,மிதந்து யமுனை போன்ற நதிகளை எல்லாம் கடந்து இறுதியில் கும்பகோணம் வந்தடைந்தது. அங்கே குடமானது சரிந்து அதில் இருக்கும் விதைகள் எல்லாம் வெளியேறி அங்கிருந்து பிரம்மா தனது படைப்பை ஆரம்பித்ததாகவும் அதனால் அவ்விடத்திற்கு திரு குடந்தை என்ற பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன

#தல வரலாறு

⭐முனிவர்கள் அனைவரும் இயற்றிய மிகப் பெரிய யாகத்தின் பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அளிப்பது என்று முனிவர்களுக்கிடையே யோசனை எழுந்தது. அத்தகைய தகுதியுடையவர் யார் என்பதை அறிந்து வர அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பிருகு முனிவரை அனுப்பி வைத்தார்கள். அவர் முதலில் சத்தியலோகம் சென்றார், பிரம்மனை சந்திக்க விரும்பிய அவரது விருப்பம் ஈடேறவேயில்லை. காரணம் பிரம்மன் உட்பட யாருமே அவரை மதிக்கவில்லை; வரவேற்கவும் இல்லை. அவரவர் தத்தமது சுகபோகங்களில் திளைத்திருந்தார்கள்; பிருகு என்ற இடையூறை அவர்கள் விரும்பவில்லை. சினம் கொண்ட முனிவர், விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டார். நேராக கயிலாயம் சென்றார். அங்கும் ஏகாந்த நிலையில் இருந்த ஈசன் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சினம் கூடியது. மூன்றாவதாக பாற்கடல் சென்றார். அங்கே திருமகள் கால்பிடித்துவிட, சுகமாக சயனித்திருந்த திருமாலும் முனிவரை கவனிக்கவில்லை. ஏற்கெனவே ஏறியிருந்த சினச் சுமை இந்தக் காட்சியைக் கண்டதும் இன்னும் அதிகமாயிற்று. எல்லா கோபத்தையும் சேர்த்து மொத்தமாகத் திருமாலின் மீது பிரயோகித்தார். தன் காலால் திருமாலின் மார்பில் உதைத்தார்.

🔥திடுக்கிட்ட மஹாவிஷ்ணு, பிருகு முனிவரின் கோபத்தை உணர்ந்து அவர் உதைக்கும் அளவுக்கு அவரை சினம் கொள்ள வைத்துவிட்டோமே என்று வருந்தி, அவரது காலைப் பிடித்து, ‘என்னை உதைத்ததால் தங்கள் பாதம் வலித்திருக்குமே,’ என்று சொன்னபடி வருடிவிட்டார். அவரை கவனிக்காத தன் பிழையைப் பொறுத்தருளும்படி கனிவுடன் கேட்டுக்கொண்டார். அந்தக் கனிவால் முனிவர் கூனிக்குறுகிப் போனார். இந்த கருணை சீலனை எவ்வளவு மோசமாக அவமதித்துவிட்டோம் என்று பெரிதும் வருந்தினார். கூடவே, இப்படி பொறுமை காத்த இந்த நாராயண மூர்த்தியே யாகப் பயனைப் பெறத் தகுதியானவர் என்று தேர்வும் செய்தார். அதன்படி வேள்விப் பலன்கள் எல்லாம் திருமாலையே சேர்ந்தன. ஆனால், திருமகளுக்கு, தன் நாயகன் பிருகு முனிவரை மன்னித்ததோடு, அவர் கால்களையும் இதமாக வருடிவிட்ட செயலும் பெரிய மனத்தாங்கலைக் கொடுத்துவிட்டது. அவர் உதைத்த இடம், தான் நிரந்தரமாக வசிக்கும் திருமார்பு அல்லவா? உடனே முனிவரை சினந்து தண்டிக்காமல், அவரை மன்னித்து, தான் பிழை செய்த தாகவும் ஒப்புக்கொள்கிறாரே, இது மஹாலட்சுமியாகிய தன்னைப் பெரிதும் அவமானப்படுத்துவதாக அல்லவா உள்ளது! இப்படி பிறருக்காகத் தன்னை விட்டுக் கொடுக்கும் இவருடன் எப்படி தொடர்ந்து வாழ்வது என்று சலித்துக் கொண்ட திருமகள் அவரைப் பிரிந்து பூலோகத்தில் கோல்ஹாப்பூர் என்ற தலத்துக்கு வந்தாள்.

😡தன் அகங்காரத்தால், நாராயணனையே அவமதித்துவிட்ட தன் இழிசெயலால் பெரிதும் வெட்கமுற்ற பிருகு முனிவர், அதனால், திருமகள், திருமாலைவிட்டுப் பிரிந்தது கண்டு வருத்தமுற்றார். இதற்குப் பிராயசித்தமாக, இனி வரும் பிறவியில் தன் மகளாக மஹாலட்சுமி பிறக்க வேண்டும் என்றும், அவளை திருமால் மணந்து தன்னுடன் மருமகனாக உறவு கொள்ள வேண்டும் என்றும் வரம் பெற கடுந்தவத்தை மேற்கொண்டார். தன்னை விட்டு திருமகள் பிரிந்ததால் பெரிதும் வாட்டமுற்ற திருமால் பூலோகத்துக்கு அவளைத் தேடுவதற்காக இறங்கி வந்தார். திருவேங்கட மலையில் ஒரு வேடுவனாக ஸ்ரீநிவாசன் என்ற பெயர் கொண்டு தன் மனதுக்கினியாளை அவர் தேடி வந்தபோது பத்மாவதியை சந்தித்தார். இந்த பத்மாவதியும், மஹாலட்சுமியின் ஓர் அம்சமே. அவளுடைய முந்தைய பிறவியில், அதாவது தன் ராமாவதார காலத்தில் அவள் வேதவதியாகத் திகழ்ந்தவள். தன்னை மணக்க விரும்பிய அவளிடம், ‘இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று ராமன் கூறிவிட்டதால், அடுத்த பிறவியிலாவது தன் எண்ணம் ஈடேறுமா என்று ஏக்கம் கொண்டிருந்தாள் வேதவதி. அதனால் அவளே பத்மாவதியாகப் பிறந்து திருமாலுக்காகக் காத்திருக்க, ஸ்ரீநிவாசனாக வந்த அவர், அவள் விருப்பத்தை நிறைவேற்றினார்.

🌹இதற்கிடையில் நாரதர் மூலமாக மஹாவிஷ்ணு பூமிக்கு வந்ததையும், ஸ்ரீநிவாசராக பத்மாவதியை மணந்து கொண்டதையும் அறிந்த திருமகளின் சினம் இன்னும் அதிகமாயிற்று. உடனே கோல்ஹாப்பூரிலிருந்து புறப்பட்டு சீற்றத்துடன் திருமலைக்கு வந்தாள். மீண்டும் அவளை கோபத்துக் குள்ளாக்கி விட்டோமே என்று வருந்திய பெருமாள், அவள் சினத்துக்கு அஞ்சி அங்கிருந்து கும்பகோணத்துக்கு ஓடோடி வந்தார். அங்கே ஒரு பாதாளக் குகையில் ஒளிந்துகொண்டார்.

🌹இப்போதும் குடந்தை சார்ங்கபாணி கோயிலில் பாதாள ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பூமிக்கு அடியில் ஒரு சந்நதியில் சேவை சாதிக்கிறார் பெருமாள். சில படிகள் இறங்கிச் சென்றுதான் இவரை தரிசிக்க முடியும். பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களில்தான் அந்த சந்நதியை தரிசனத்துக்காகத் திறந்து வைப்பார்கள் என்று கோயிலில் குறிப்பிட்டார்கள்.

🌹தேடி வந்த நாயகன் காணாமல் ஒளியவே, துயரம் கொண்டாள் தேவி. இனி அவனைக் காண வேண்டுமானால் அது கடுந் தவத்தால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்து அவ்வாறே தவம் மேற்கொண்டாள். அதுவும் எப்படி? ஒரு தடாகத்தில், ஒரு தாமரை மலரில் சிறு குழந்தையாக உருமாறி! அப்போது அங்கே குடிலமைத்து இறைப்பணி ஆற்றிய பிருகு முனிவர் அந்தக் குழந்தையைப் பார்த்து, பெருமகிழ்வு கொண்டு தன் மகளாக எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். தாமரையில் தோன்றியவள் என்பதால் கோமளவல்லி என்று பெயருடன் அவள் பொலிவுடன் திகழ்ந்தாள். இந்த சம்பவங்களை இப்படியே விட்டுவிட்டு, மீண்டும் ராமாவதார காலத்துக்குச் செல்வோம். பட்டாபிராமனாக அயோத்தியே அகமகிழ முடிசூட்டிக்கொண்ட ராமன், தன்னுடைய இந்த சந்தோஷத்துக்குக் காரணமான அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். அந்த வகையில் விபீஷணனுக்கு தன் இக்ஷ்வாகு வம்சத்தவரால் வழிவழியாக வழிபடப்பட்டுவந்த ஆராதன விக்ரகத்தை அளித்தார்.

🌹ப்ரணவாக்ருதி மற்றும் வைதிக விமானங்களைக் கொண்ட அந்த அர்ச்சா மூர்த்தியை விபீஷணன் இலங்கைக்குப் பேருவகையுடன் கொண்டு சென்றான். ஆனால் வழியில் ஸ்ரீரங்கத்தில் ப்ரணவாக்ருதி விமானத்துடன் அரங்கன் அங்கேயே தான் தங்கிவிடும் விருப்பத்தை விபீஷணனுக்குச் தெரிவித்து, தன்னை அவன் ஆண்டுக்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் செல்லலாம் என்று தெரிவித்துவிட்டார். விபீஷணன் திகைத்து நிற்க, வைதிக விமானத்துடன் தான் குடந்தையில் அர்ச்சாவதார ரூபியாக சேவை சாதிக்கப் போவதாகவும், தன் திருமகளை அங்கே மணம் புரிய விருப்புதாகவும் தெரிவித்தார். அதேபோல குடந்தையில், வில்லெந்திய கோலத்தில் கோயில் கொண்ட அவர், கோமளவல்லியாக அவதரித்திருந்த மஹாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டு அனைவரது விருப்பங்களையும் பூர்த்தி செய்தார். அப்படி மகிழ்ந்தவர்களில் பிருகு முனிவர் முக்கியமானவர். தான் அவமதித்ததையும் பொருட்படுத்தாமல் தன் பாதங்களைத் தன் திருக்கரங்களால் வருடி ‘தான் நாண நன்னயம் செய்த’ பெருமாளே தனக்கு மருமகனாகவும் மாறிய தெய்வானுக்ரகத்துக்கு உள்ளம் நெகிழ நன்றி சொன்னார் அவர். தன்மீது கோபமுற்ற திருமகளே தனக்கு மகளாக அமைந்ததும் அவர் மனதை நிறைவித்தது.

🌺கோமளவல்லியை மணம் புரிந்துகொண்ட தாலேயே இத்தலம் கல்யாணபுரி என்றும் வழங்கப்பட்டது. கோமளவல்லி அவதரித்த ஹேமபுஷ்கரிணியில் இன்றளவும் நடத்தப்படும் மாசி மாத தெப்போற்சவம் மிகவும் பிரபலமானது. ஸ்ரீரங்கம், பெருமாளின் பெருமைக்குரிய க்ஷேத்திரம் என்றால், திருக்குடந்தை அவரது பேரழகைப் போற்றும் திருத்தலம் என்பார்கள். காவிரியும் கொள்ளிடமும், ஸ்ரீரங்கனை அரவணைத்துச் செல்வதுபோல, குடந்தை சார்ங்கராஜாவையும் காவிரியும், அரசலாறும் தழுவிச் செல்கின்றன.

🌺தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது.

🌏பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார்.


🌙உற்சவர் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் (வில்), உடைவாள் ஆகிய ஐந்து ஆயுதங்களுடன், வலது கரம் அபயமளிக்கும் முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.


🌏திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் 11 ஆழ்வார்களாலும், திருப்பதி 10 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு 7 ஆழ்வார்களால் (பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்) இத்தலமே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
திருமால் பலவிதமான சயனங்களில் பள்ளி கொண்ட தலங்கள் உள்ளன. இத்தலத்தில் திருமாள் உத்தான சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். முழுமையாக பள்ளிகொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை ‘உத்தான சயனம்’ என்பர்.

☀பெருமாளே, ஏன் படுத்திருக்கிறீர்கள்? வராஹ அவதாரம் மேற்கொண்டு, பாதாள லோகம் சென்று பூமித் தாயை மீட்டுத் தாங்கி வந்தீர்களே, அந்தக் களைப்பா? ராமாவதாரம் எடுத்து, காடு, மலை, மேடுகளிலெல்லாம் நடந்து, நடந்து கால்கள் நோவுற்றனவோ என் ஐயனே, அதனால்தான் சயனித்திருக்கிறீர்களா? எழுந்திருங்கள் சுவாமி, பதில் கூறுங்கள்,’’ என்று மிகுந்த பரிவுடன் கேட்கிறார். ஆனால் அவருக்கு பதிலளிக்க பெருமாள் எழுந்திருக்க யத்தனித்தபோது, ஆழ்வாருக்கு மனசு பதறிப் போகிறது. ‘அடடா, ஓய்வாக சயனித்திருக்கும் என் தலைவனை எழுப்பிவிட்டேனே,’ என்று தன்னையே கடிந்து கொள்கிறார். உடனே, ‘வாழி கேசனே, அப்படியே படுத்திரும்’ என்று சொல்லி, அவரை மீண்டும் ஓய்வு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். இப்படி ஆழ்வாருக்கு பதில் சொல்ல எழ முனைந்த திருக்கோலம்தான் இப்போது நாம் தரிசிப்பது. இதனாலேயே ஆழ்வார் அனுமதித்திட, பெருமானும் சிறிது எழுந்த நிலையில் சயனத் திருக்கோலத்தில் காணப்படுகிறார். இப்படி இவரை எழச்சொன்ன ஆழ்வாருக்கு ‘திருமழிசைப்பிரான்’ எனத் திருநாமம் ஏற்பட்டது.

🌙இந்தக் கோயிலில் கர்ப்பக் கிரகம் வித்தியாசமானது. ஒரே கல்லால் ஆனது. அதுவும் ஒரு தேர் வடிவத்தில், யானையும், குதிரையும் இழுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் பெருமாளை தரிசிக்க, ஆடி மாதம் முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும். இது தட்சிணாயன தேவதையின் வேண்டுகோள் என்றும் அதனை மதிக்கும் வகையில் ஆராவமுதன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்தான் என்றும் சொல்கிறார்கள். அதேபோல தை முதல் ஆனி முடிய தட்சிணாயன வாசல் வழியாகச் சென்றுதான் மூலவரை தரிசிக்க முடியும். அதனால், கர்ப்பக் கிரகத்துக்கு இருபுறங்களிலும் இவ்விரு வாசல்கள் உள்ளன. பெருமாள் எழுந்தருள்வதும், அந்தந்த மாதங்களில் அந்தந்த வாசல் வழியாகத்தான்.இந்தக் கருவறை அமைப்புக்கு ஏற்றாற்போல திருமங்கையாழ்வார் ஒரு சிறப்பு செய்திருக்கிறார். இது வேறு எந்த திவ்ய தேசத்துக்கும் இல்லாத பெருமை என்றே சொல்லலாம். அதாவது தேர் வடிவில் அமைத்த திருவெழுக்கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தால் அவர் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இக்கோயிலில் தாயாரே பிரதானமாக கருதப்படுகிறார். நடை திறக்கப்படும்போது, தாயார் சந்நிதியில் கோமாதா பூஜை செய்யப்பட்ட பிறகே, சுவாமி (குடந்தைக் கிடந்தான்) சந்நிதியில் நடத்தப்படுகிறது.

🌹லட்சுமி நாராயணசாமி என்ற பக்தர், தனது இறுதிக்காலம் வரை இக்கோயிலுக்கு சேவை புரிந்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒரு தீபாவளி தினத்தில் இவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால், பெருமாளே அவருக்கு மகனாக இருந்து இறுதிச் சடங்குகள் செய்தார். இன்றும் சாரங்கபாணி பெருமாள், பக்தருக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

🌹பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், “சார்ங்கபாணி’ என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.

🌏இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது. (இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன சிலதை மட்டுமே பதிவிட்டிருக்கின்றேன் நன்றி)

மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன்

தாயார் : கோமளவல்லி

தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு

புராண பெயர் : திருக்குடந்தை

ஊர் : கும்பகோணம்

மாவட்டம் : தஞ்சாவூர்

Address

Mangadu
600122

Alerts

Be the first to know and let us send you an email when Om Sri Kamatchi Amman ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Om Sri Kamatchi Amman ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்மன்:

Share

Category