18/05/2016
புதுகை மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 93.01% தேர்ச்சி 14 அரசு பள்ளிகள் 100 சதவீதம்
புதுக்கோட்டை, : பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 93.01 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 3.45 சதவீதம் அதிகம் ஆகும்.கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,549 மாணவர்களும், 9,919 மாணவிகள் என 18,468 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7634 மாணவர்களும், 9543 மாணவிகள் என மொத்தம் 17,177 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.01 சதவீத தேர்ச்சியாகும். இது கடந்த ஆண்டை விட 3.45 சதவீதம் அதிகம்.
மாவட்டத்தில் 151 மேல்நிலைப்பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 99 அரசு பள்ளிகளில் 14 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும், 16 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும், 36 தனியார் பள்ளிகளில் 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று ள்ளன. கீரமங்கலம், திருமயம் மற்றும் சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாஞ்சூர், மேற்பனைக்காடு, தாந்தோனி, நெடுவாசல், ஆலவயல், மண்டையூர், கவரப்பட்டி, கல்லூர், கலியராயன்விடுதி, புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என 34 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
புதுகை கல்வி மாவட்டத்தில் 4722 மாணவர்கள், 5,578 மாணவிகள் உள்ளிட்ட 10,300 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,295 மாணவர்கள், 5,357 மாணவிகள் என மொத்தம் 9652 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.71 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 3.68 சதவீதம் அதிகம். கல்வி மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 65 பள்ளிகளில் 13 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3827 மாணவர்கள், 4341 மாணவிகள் உள்ளிட்ட 8168 பேர் தேர்வு எழுதினர். இதில் 3339 மாணவர்கள், 4186 மாணவிகள் உள்ளிட்ட 7525 தேர்ச்சி பெற்றனர். இது 92.13 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 3.18 சதவீதம் அதிகம் ஆகும்.
அரசுப்பள்ளி அளவில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்தனர்.அறந்தாங்கி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷனி 1157 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்தார். புதுக்கோட்டை அரசு ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தன்சிரா பர்வீன் 1155 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தையும். புதுக்கோட்டை அரயாப்பட்டி அரசு மேநிலைப்பள்ளி மாணவி சரஸ்வதி 1152 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தை பிடித்தார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதுக்கோட்டை தூய இருதய மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஷமீம்ருக்சனா 1164 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கடியாபட்டி உலகப்பர் மேனிலைப்பள்ளி மாணவி வைரமணி 1143 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், புதுகை தூய இருதய மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி காவியரசி 1137 மதிப்பெண் பெற்று 3ம் இடமும் பெற்றனர்.
மாவட்டத்தில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம்: தமிழ்- 97.67, ஆங்கிலம்-97.96, இயற்பியலில் 98.27, வேதியியல்- 98.39, உயிரியல்-97.27, தாவரவியல்- 94.9, விலங்கியல்-95.12, புள்ளியியல்- 98.09, கணினி அறிவியல்- 98.74, கணிதம்-94.99 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.