11/02/2026
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள்………
க.பொ.த.உ/த பரீட்சைக்கு தோற்றி, பல்கலைக்கழக அனுமதிக்கான
அடிப்படைத் தகுதிகளைப் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள்.
1.மூன்று தடவைகளுக்கு மேல் க.பொ.த.உ/த பரீட்சைக்கு தோற்றிய
மாணவர்கள்.
2.அரச பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்கனவே கற்கைநெறி ஒன்றுக்கு உள்வாரியாகப் பதிவு செய்தவர்கள்.
3.இலங்கை பாராளுமன்ற சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரச பல்கலைக்கழகம்/உயர் கல்வி நிறுவகம் ஒன்றில் உள்வாரியாக பதிவு செய்தவர்கள்.
*இலங்கை பிக்கு பல்கலைக்கழகம்
*பௌத்த மற்றும் பாளி பல்கலைக்
கழகம்.
*சேர் ஜோன் கொத்தலாவெல
பாதுகாப்பு பல்கலைக்கழகம்.
*வாழ்க்கை தொழில் சார் தொழில்
நுட்ப பல்கலைக்கழகம்.
*இலங்கை சமுத்திரப் பல்கலைக்
கழகம்.
4.கல்வியியல் கல்லூரி ஒன்றில் உள்வாரியாகப் பதிவு செய்தவர்கள்.
5.வாழ்க்கைத் தொழில் சார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்
பல்கலைக்கழக கல்லூரி ஒன்றில் மூன்று வருட டிப்ளோமாவுக்கு
உள்வாரியாகப் பதிவு செய்தவர்கள்.
6.SLATE இன் கீழ் வரும் ஒரு நிறுவனத்தில்/தேசிய பயிலுநர் கைத்தொழில் அதிகாரசபையின் (NAITA) கீழ் வரும் ஒரு நிறுவனத்தில் மூன்று வருட டிப்ளோமாவுக்கு உள்வாரியாகப் பதிவு செய்தவர்கள்.
7.உயர் கல்வி அமைச்சின் மூலம் வெளிநாட்டு புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்.
8.தற்போதைய கல்வி ஆண்டில்/ முன்னைய கல்வி ஆண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கு/பதிவுக்கு தவறான/போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த மாணவர்கள்.
பல்கலைக்கழக அனுமதியை பெறுவதற்கு வயது தடையில்லை. ஆதலால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 17 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பல்கலைக்கழகம் ஒன்றில் உள்வாரியாகப் பதிவு செய்யலாம். அதேபோல் க.பொ.த சா/த பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி அவசியமில்லை.
அதேவேளை ஐந்து வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்த அரச பாடசாலை ஆசிரியர்கள் பின்வரும் விசேட ஏற்பாடுகளின் கீழ் பல்கலைக்கழகம் ஒன்றில் உள்வாரியாகப் பதிவு செய்யலாம்.
*ஆங்கிலத்தை ஓரு பாடமாகக் கொண்ட பொதுக்கலை முதற் தேர்வில் (GAQ) வெளிவாரியாகச் சித்தியடைந்த ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைக் கற்கைநெறி ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
*விஞ்ஞான மாணி (வெளிவாரி) பட்ட நிகழ்ச்சியில் முதல் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்கள், உயிரியல் விஞ்ஞானம்/பௌதீக விஞ்ஞானம்/பிரயோக விஞ்ஞான கற்கைநெறிக்கு உள்வாரியாகப் பதிவு செய்யலாம்.
குறிப்பு; பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற, ஆனால் பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளிக்கு குறைந்த புள்ளிகள் பெற்றவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காது.
எனினும் அடுத்த வருடம் பொது சாதாரணப் பரீட்சையில் 30 புள்ளிக்கு மேல் பெற்றால் பல்கலைக்கழக அனுமதியை பெறலாம்.அதாவது ஒரு வருட தாமதமாகவே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்.
அதேபோல் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் மூன்று அமர்வுகளில் ஏதாவது ஒரு அமர்வில் பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றாலும் பல்கலைக்கழக அனுமதி பெறலாம்.